அரசு மாணவர்களின் மருத்துவ கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் - MKS

தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்ட அரசு மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக ஏற்றுக்கொள்ளும் என மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..!

Last Updated : Nov 21, 2020, 01:19 PM IST
அரசு மாணவர்களின் மருத்துவ கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் - MKS title=

தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்ட அரசு மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக ஏற்றுக்கொள்ளும் என மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..!

"தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் முழுமையாக ஏற்கும்" என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

-   கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு... "தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையையும், வெளிப்படுத்தும் வகையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று, சட்டமன்றத்தில் நிறைவேற்றித் தந்தும், அதனை மத்திய அரசிடம் உரிய வகையில் வலியுறுத்திச் செயல்படுத்தும் வலிமையும், அக்கறையுமற்ற அ.தி.மு.க. அரசினால், அரியலூர் அனிதா தொடங்கி ஆண்டுதோறும் பல மாணவமணிகளின் உயிரைக் கொன்று குவித்தது  நீட் எனும் கொடுவாள். அதனால்தான், தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். 

அ.தி.மு.க. ஆட்சியாளர்களோ, எத்தனை உயிர்கள் போனால்  எங்களுக்கென்ன, எங்கள் கல்லாப் பெட்டிகள்  நிரம்பி வழிந்திடும் வகையில் கமிஷன் கிடைக்கும் டெண்டர்களை வழங்கும் ஆட்சியதிகாரம் மட்டும்  இருந்தாலே போதும் என அடங்கி இருந்தார்கள். நீட் தேர்வால் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு சிதறடிக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு என அ.தி.மு.க அரசு அறிவித்தது. அதிலும்கூட, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு பரிந்துரைத்த 10% உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால், தங்களுடைய டெல்லி எஜமானர்களின் எரிபார்வைக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சி, 7.5% என்பதை மட்டுமே எனத் தீர்மானமாக நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிவிட்டு, அத்துடன் தமது கடமை முடிந்து விட்டதாக எண்ணி, பேசாமல் இருந்துவிட்டனர். அங்கே நீண்ட உறக்கம் கொண்டிருந்த உள் இட ஒதுக்கீடு திட்டம், ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.கழகம் நடத்திய மகத்தான போராட்டத்தினாலும், உயர்நீதிமன்றத்தின் கண்டிப்பினாலும் தற்போது விழித்து, செயல்வடிவம் பெற்றுள்ளது. அந்த அளவில், இதனை தி.மு.கழகமும் வரவேற்கிறது. 

ALSO READ | மீண்டும் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு!

நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டின்படி, அரசு மருத்துவக்கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்குரிய கட்டணத்தை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை இருப்பதால், அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அ.தி.மு.க அரசை,  மாணவர்களும் பெற்றோரும் நம்பியிருந்த நிலையில், மருத்துவக் கனவு மீண்டும் சிதைக்கப்பட்டுவிடுமோ என்ற மனப் பதற்றத்திற்கும் அச்சத்திற்கும் ஆளாகி இருக்கின்றனர். 

அவர்களின் துயர் துடைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும் என்பதை நினைவூட்டும் அதே நேரத்தில், மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தி.மு.கழகம், இந்தக் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை முழுமையாக ஏற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கின்ற தி.மு.கழக ஆட்சியில்,  நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்குரிய சட்ட நடவடிக்கைகள் உறுதியாக மேற்கொள்ளப்பட்டு, அரசுப்பள்ளி - அரசு உதவிபெறும் பள்ளி - கிராமப்புற - ஏழை - பின்தங்கிய - ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மாணவமணிகளின் மருத்துவக் கனவும் நிச்சயமாக நிறைவேறும் என்ற உறுதியினை இப்போதே வழங்குகிறேன்.

Trending News