விடியல் இல்லை, விலை ஏற்றம் மட்டுமே உள்ளது: அரசை சாடும் அண்ணாமலை

விடியல் தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து விலையேற்றத்தை மட்டுமே தந்துள்ளது இந்த திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 17, 2022, 04:53 PM IST
  • திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்களில் விலையேற்றம் முன்னிலையில் இருக்கிறது: அண்ணாமலை
  • தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பெட்ரோல் விலை 5 ரூபாய் மற்றும் டீசல் விலை 4 ரூபாய் குறைப்போம் என்பதையும் இந்த திறனற்ற திமுக அரசு நிறைவேற்றவில்லை: அண்ணாமலை
  • மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத திமுகவிடம் அவர்களின் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செய்யுங்கள் என்று யாராவது கேள்வி கேட்டால் உதாசீனப் படுத்துகிறார்கள்: அண்ணாமலை
விடியல் இல்லை, விலை ஏற்றம் மட்டுமே உள்ளது: அரசை சாடும் அண்ணாமலை title=
திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மக்கள் நலனுக்காக எதையுமே செய்யவில்லை என்றும், பால், மின்சாரம், சிமெண்ட், செங்கல், மணல், என பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டு மக்கள் அவதியில் ஆழ்ந்துள்ளார்கள் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
 
‘திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்களில் விலையேற்றம் முன்னிலையில் இருக்கிறது. மக்களின் மேல் அக்கறை கொண்டவர்களை போல நாடகமாடிய இந்த திறனற்ற திமுக அரசின் சாயம் வெளுக்க தொடங்கிவிட்டது. சென்ற வாரம் மின் கட்டண உயர்வின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன் ஆவின் பொருட்களின் விலையை ஏற்றியுள்ளார்கள். திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் ஏமாற்று வாக்குறுதிகள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்களின் மீது சுமத்தப்படும் வரிகள் மற்றும் விலையேற்ற நடவடிக்கைகள் இருக்கிறது. 
 
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக கட்டுமான பொருட்களின் விலையை ஏற்றினர். சிமெண்ட், செங்கல், மணல், கம்பிகள் மற்றும் இதர கட்டுமான பொருட்களின் விலையும் ஒரேயடியாக உயர்த்தப்பட்டது. 410 ரூபாயாக இருந்த சிமெண்ட் 500 ரூபாயாகவும், 60 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கம்பியின் விலை 72 ரூபாயாகவும், 3,600 ரூபாயாக இருந்த எம் சாண்ட் 4,000 ஆயிரமாகவும், 4,600 க்கு விற்கப்பட்ட வி சாண்ட் 5,100 ஆகவும், 23000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லோடு செங்கல் 28000 ரூபாயாகவும் , 8,500 க்கு விற்கப்பட்ட 3 யூனிட் ஜல்லி 9,500 ரூபாயாகவும் வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தப்பட்டது. 
 
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பெட்ரோல் விலை 5 ரூபாய் மற்றும் டீசல் விலை 4 ரூபாய் குறைப்போம் என்பதையும் இந்த திறனற்ற திமுக அரசு நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் மின்சார கட்டணம் போன்றவற்றை உயர்த்தி உள்ளது.
 
 
மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத திமுகவிடம் அவர்களின் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செய்யுங்கள் என்று யாராவது கேள்வி கேட்டால் உதாசீனப் படுத்துகிறார்கள். வாக்குறுதிகளை சொல்லி தானே வெற்றிபெற்றீர்கள், அதை நிறைவேற்ற வேண்டாமா என்று கேட்டால் தேர்தல் வாக்குறுதிகள் வெற்றியை நிர்ணயிக்காது என்கிறார் திறனற்ற திமுக அரசின் நிதி அமைச்சர். 
 
2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆவினில் இருந்து தயாரிக்கப்படும் பால் பொருட்களின் விலையை திமுக உயர்த்தியது. அப்போது நெய் லிட்டருக்கு 30 ரூபாயும், பாதாம் பால் பவுடர் கிலோவுக்கு 100 ரூபாய் வரையிலும் வரலாறு காணாத அளவுவுக்கு உயர்த்தப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் பங்கேற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அவரின் ஒப்புதலோடு பரிந்துரைக்கப்பட்ட பால் பொருட்களுக்கான 5 சதவீத வரி விதிப்பை காரணம் காட்டி 10 ரூபாய்க்கு விற்ற தயிருக்கு 10 ரூபாய் 50 பைசா என்று உயர்வதற்கு பதில் 12 ரூபாய்க்கு உயர்த்தியது அனைவரும் அறிந்ததே.
 
இந்த விலையேற்றமானது சாதாரண அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவிற்கு பின்னடைவை நோக்கி செல்ல வழிகோலும் என பலதரப்பட்ட மக்களிடம் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கைகளை எல்லாம் ஆட்சி அதிகார மமதையில் இருக்கும் இந்த திமுக அரசு செவி கொடுத்து கேட்க தயாராக இல்லை.
 
ஆவினில் பால் வாங்கும் அடித்தட்டு மக்களை பெருமளவில் பாதித்து வரும் வேளையில் முக்கியமான பண்டிகை தினங்களில் ஆவினில் விற்கப்படும் பாலில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கி பயன் பெற்று வரும் மக்களுக்கு பேரதிர்ச்சியாக தற்போது ஆவினில் இனிப்பு வகைகளின் விலையையும் உயர்த்தியுள்ளார்கள். குலாப் ஜாமுன், ரசகுல்லா, பால்கோவா உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ரூபாய் 20 முதல் 80 வரை உயர்த்தி இருப்பது அடுத்ததாக வரும் பண்டிகைக்கு ஆவினில் நடுத்தர ஏழை மக்கள் சென்று இனிப்பு வகைகள் வாங்க இயலாத சூழலை உண்டாக்கியுள்ளது. 
 
தாங்களாகவே அனைத்திற்கும் விலையை ஏற்றி வைத்து விட்டு மத்திய அரசு தான் சொன்னது நாங்கள் செய்தோம் என்று பொய் பிரச்சாரங்களை செய்யும் திமுக அரசு தமிழக மக்களின் மீது திணிக்கும் இந்த விலையேற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். விடியல் தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து விலையேற்றத்தை மட்டுமே தந்துள்ளது இந்த திறனற்ற திமுக அரசு. 
 
இப்படி 3 மாதங்களுக்கு ஒரு முறை விலையேற்றி வரும் ஆவின் நிறுவனம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பாலின் விலையை ஏன் இதுவரை ஏற்றவில்லை? 

பத்திரிகையாளர் கேட்கும் கேள்விக்கு சம்மந்தமே இல்லாமல் பதில் சொல்வது, வேடிக்கையாக பேசுவதாக நினைத்து தரம் தாழ்ந்து பேசுவது, பாஜக கொடுக்காத வாக்குறுதியை கொடுத்ததாக மக்களிடம் பொய் சொல்வது என்பது திரு நாசர் அவர்களின் வாடிக்கையாகிவிட்டது. பால்வளத்துறை அமைச்சர் திரு நாசர் அவர்கள், திருவள்ளூர் மற்றும் ஆவடி பகுதிகளில் உள்ளாட்சி முதல் பொதுப்பணித்துறை வரை அனைத்து துறைகளின் வசூலை கவனித்து வருவதால், மக்கள் நலனை பற்றி சிந்திக்க அவருக்கு நேரம் இல்லை.’ என்று கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் கேட்கும் கேள்விக்கு சம்மந்தமே இல்லாமல் பதில் சொல்வது, வேடிக்கையாக பேசுவதாக நினைத்து தரம் தாழ்ந்து பேசுவது, பாஜக கொடுக்காத வாக்குறுதியை கொடுத்ததாக மக்களிடம் பொய் சொல்வது என்பது திரு நாசர் அவர்களின் வாடிக்கையாகிவிட்டது. பால்வளத்துறை அமைச்சர் திரு நாசர் அவர்கள், திருவள்ளூர் மற்றும் ஆவடி பகுதிகளில் உள்ளாட்சி முதல் பொதுப்பணித்துறை வரை அனைத்து துறைகளின் வசூலை கவனித்து வருவதால், மக்கள் நலனை பற்றி சிந்திக்க அவருக்கு நேரம் இல்லை.’ என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | மக்களின் பிரச்னையை பிக்பாஸில் தீர்க்கலாம் என நினைக்கக்கூடாது - கமலை வறுத்தெடுக்கும் வானதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News