EPFO Withdrawal Rules: எந்தெந்த சந்தர்ப்பங்களில் பிஎஃப் கணக்கில் முன்பணம் எடுக்கலாம்?

EPF Withdrawal Rules: நமது வாழ்வில் பணத்திற்கான தேவை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நாம் சேமித்து வைத்திருக்கும் பணமும், முதலீடு செய்திருக்கும் தொகையும் நமக்கு உதவியாக இருக்கும்.

அலுவலக பணிகளில் பணிபுரியும் அனைவரும் பெரும்பாலும் மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் (EPF Account) பங்களிக்கிறார்கள். இந்த தொகையை பணி ஓய்வுக்கு பின்னரே எடுக்க முடியும் என்றே பலர் கருதுகிறார்கள். ஆனால், அதற்கு முன்னதாகவும், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் இபிஎஃப் தொகையின் ஒரு பகுதியை எடுக்கலாம் (Partial Withdrawal). எந்தெந்த தேவைகளுக்காக இபிஎஃப் தொகையை முன்பணமாக எடுக்கலாம் என இந்த பதிவில் காணலாம்.

1 /7

ஒரு பணியாளர் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு இபிஎஃப்ஓ கணக்கில் பங்களிப்பு அளித்து வந்தால், அவர் வீடு அல்லது மனை வாங்க பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம். வீடு அல்லது மனை வாங்க, மாதச் சம்பளத்தில் 24 மடங்கு வரையிலும், நிலம் வாங்கி வீடு கட்ட மாதச் சம்பளத்தின் 36 மடங்கு வரையிலும் கணக்கிலிருந்து எடுக்கலாம். 

2 /7

வீடு வாங்குதல் போன்ற தேவைகளுக்காக EPFO வீட்டுவசதி திட்டத்தின் கீழ், பிஎஃப் கணக்கில் உள்ள மொத்த தொகையில் 90% வரை எடுக்கலாம். ஆனால், இதற்கு வீட்டு வசதி நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட 10 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுறவு அல்லது சங்கத்தில் நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் இதில் நீங்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு இபிஎஃப் -இல் பங்களித்திருக்க வேண்டும். மேலும், உங்கள் பிஎஃப் கணக்கில் (PF Account) குறைந்தபட்சம் 20,000 ரூபாய் இருக்க வேண்டும்.

3 /7

ஒரு பிஎஃப் சந்தாதாரர் 5 ஆண்டுகளுக்கு EPF இல் பங்களிப்பு அளித்திருந்தால், அவர் வீட்டை புதுப்பிப்பதற்கு இபிஎஃப்-இல் இருந்து பணம் எடுக்கலாம். இந்த தேவைக்காக மாதச் சம்பளத்தின் 12 மடங்கு வரை எடுக்க முடியும். ஒரு பிஎஃப் சந்தாதாரர் (PF Subscriber) 3 ஆண்டுகளுக்கு EPF இல் பங்களிப்பு அளித்திருந்தால், அவர் வீட்டுக் கடனை செலுத்துவதற்கான தொகையை எடுக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், அவர் பிஎஃப் இருப்பில் 90% வரை எடுக்க முடியும். 

4 /7

தீவிர நோய்களுக்கான சிகிச்சை, நிரந்தர ஊனம், பணி இடத்தில் விபத்து, நிறுவனத்தின் மூடல் போன்ற அவசர தேவைகளின் போது, கால அளவு எதுவும் பார்க்கப்படுவதில்லை. ஒரு இபிஎஃப் உறுப்பினர், அவரது அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களின் சிகிச்சைக்காக மொத்த இபிஎஃப் தொகையையும் (EPF Amount) எடுக்க நினைத்தால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றதற்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும்.

5 /7

பிஎஃப் உறுப்பினரின் உடன் பிறந்தவர்கள், குழந்தைகள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களில் திருமணம், அல்லது குழந்தைகளின் கல்வி ஆகியவற்றுக்காக உறுப்பினர் முன்பணம் எடுக்கலாம். எனினும், இந்த இரு தேவைகளுக்கும் பணியாளர் 7 வருடங்களுக்கு பணிபுரிந்திருக்க வேண்டும். 7 ஆண்டுகள் பணி செய்திருந்த ஒருவர், மொத்த இருப்பில் 50% வரை முன்பணமாக எடுத்துக்கொள்ளலாம்.

6 /7

நிறுவனம் 15 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தால், பணியாளர்கள் தங்கள் கனக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தங்கள் பங்கு முழுவதையும் எடுக்கலாம். ஒரு பணியாளர் தனது வேலையை இழந்திருந்தாலோ அல்லது பணியில் இருந்து விலகி இருந்தாலோ, அவர் மொத்த இருப்பில் 75 சதவிகிதம் வரை திரும்பப் பெறலாம். புதிய வேலைவாய்ப்பைப் பெறும்போது மீதமுள்ள தொகை உங்கள் புதிய EPF கணக்கிற்கு மாற்றப்படும். ஆனால் நீங்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால், நீங்கள் முழு PF தொகையையும் எடுக்கலாம். 

7 /7

அலுவலக பணிகளில் இருக்கும் பணியாளர்களுக்கு (Employees) இபிஎஃப்ஓ பிஎஃப் தொகை மட்டுமல்லாமல் இன்னும் பல வசதிகளை வழங்குகிறது. இவற்றை பற்றிய புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். அப்போதுதான் தேவையான நேரத்தில் நமக்கு இருக்கும் வசதியை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.