ஆந்திரா முதல்வர் மீது கல்வீச்சு தாக்குதல்... ஜெகன் மோகன் படுகாயம் - பிரச்சாரத்தில் நடந்தது என்ன?

Jagan Mohan Reddy Injury: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேர்தல் பரப்புரைக்காக 'ரோட் ஷோ' மேற்கொண்ட அம்மாநில  முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 13, 2024, 10:36 PM IST
  • ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
  • மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • இதற்காக, ஆந்திர முதல்வர் திறந்த வெளி பேருந்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஆந்திரா முதல்வர் மீது கல்வீச்சு தாக்குதல்... ஜெகன் மோகன் படுகாயம் - பிரச்சாரத்தில் நடந்தது என்ன? title=

Andhra Chief Minister Jagan Mohan Reddy Injury: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேர்தல் பரப்புரைக்காக 'ரோட் ஷோ' மேற்கொண்ட அம்மாநில  முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரின் காயமடைந்த முகத்தின் புகைப்படங்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதன் X பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அதன் X பதிவில், "விஜயவாடாவில் குண்டர்களின் மூலம் சந்திரபாபு தான் நம் தலைவர் ஜெகன் மோகனை தாக்கினார். இது நம் அனைவருக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியின் கோழைத்தனமான செயல். நம் தலைவரின் பேருந்து யாத்திரை வெற்றியையும், தலைவர் மீதான மக்களின் பெரும் அபிமானத்தையும் தாங்கிக்கொள்ள முடியாததால் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் அமைதியாகவும், நிதானத்துடன் செயல்படுங்கள். இதற்கு வரும் மே 13ஆம் தேதி அன்று அனைத்து வாக்காளர்களும் பதிலளிப்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளது. 

கண் புருவத்தின் மேலே காயம்

விஜயவாடாவில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று மக்களவை தேர்தலுக்கும், அம்மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்ந்த தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இந்த இரண்டு தேர்தல்களின் வாக்குப்பதிவும் வரும் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 

மேலும் படிக்க | மோடியின் உத்தரவாதம் vs ராகுலின் உத்தரவாதம்... மக்கள் அதிகம் நம்புவது எதை? - முடிவுகள் இதோ!

இந்த தேர்தலை முன்னிட்டு, மேமந்த சித்தம் (நாங்கள் அனைவரும் தயார்) பஸ் யாத்திரை என்ற பெயரில் திறந்தவெளி பேருந்தில் அவர் பரப்புரை மேற்கொண்டு வந்தார். அவர் பரப்புரை மேற்கொண்டு வந்தபோது அவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் ஜெகன் மோகனின் இடது கண் புருவத்தின் மேலே ரத்த காயம் ஏற்பட்டது. 

கவண் மூலம் தாக்குதல்?

முதல்வரின் அருகில் நின்று கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் வெள்ளம்பள்ளி சீனிவாச ராவும் கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட பாதுகாவலர்கள் ஜெகன் மோகன் ரெட்டியை வாகனத்திற்குள் கொண்டுசென்றனர். அங்கே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேம்மந்த சித்தம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

தொலைவில் இருந்து வீசப்பட்ட கல் ஏற்படுத்திய காயம் அதன் தாக்கம் ஆகியவற்றை பார்க்கும்போது அந்த கல்லை யாரோ விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை தாக்க பயன்படுத்தும் 'கவண்' மூலம் குறி பார்த்து எய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான தாக்குதலுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்,"ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் மீது கல் வீசப்பட்டதை கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும்போது நாகரீகத்தையும் பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என X தளத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

ஆந்திராவில் 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் மே 13ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. பாஜக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாண் ஜன சேனா கட்சி ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க | 'கை' நழுவிப்போகும் அமேதி: சுதாரிக்குமா காங்கிரஸ்? களமிறங்குவாரா ராகுல் காந்தி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News