ஒரே மாதத்தில் காேடீஸ்வரனாக மாறிய தக்காளி விவசாயி..! எப்படி தெரியுமா..?

Pune Tomato Farmer: இந்தியா முழுவதும் தக்காளியின் விலை ஏறியுள்ளதை தொடர்ந்து மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.  

Written by - Yuvashree | Last Updated : Jul 17, 2023, 06:28 PM IST
  • தக்காளி விலை உயர்வு எதிரொலி.
  • மகாராஷ்டிர விவசாயி ஒரே மாதத்தில் கோடீஸ்வரரான அதிசயம்.
  • எப்படி தெரியுமா?
ஒரே மாதத்தில் காேடீஸ்வரனாக மாறிய தக்காளி விவசாயி..! எப்படி தெரியுமா..?  title=

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக ‘ஹாட் டாப்பிக்’ ஆக இருப்பது தக்காளி விலை நிலவரம்தான். தக்காளிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக தக்காளியின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிர விவசாயி ஒருவர் தக்காளி விற்றே 1 மாதத்தில் கோடீஸ்வரனாக மாறியுள்ளார். 

மகாராஷ்டிர விவசாயி:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தில் உள்ள ஜுன்னூர் என்ற இடத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் தக்காளிகளை விளைவித்து வருகின்றனர். அந்த விவசாயிகளுள் ஒருவர், தற்போது மில்லியனர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ‘திண்ணையி கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்த கல்யாணம்..’ போல, தக்காளி விலை உயர்வு இவருக்கு பல கோடிகள் கிடைக்க காரணமாக அமைந்துள்ளது.  

திடீர் பணக்காரரான அந்த விவசாயியின் பெயர், துக்காராம் பகோஜி கயாக்கர். இவர், தக்காளியை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இவரின் குடும்பம், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13,000 ஆயிரம் தக்காளி பெட்டிகளை விற்றுள்ளது. ஆனால், அவ்வளவு தக்காளியை விற்றது பெரிய விஷயமல்ல. அந்த தக்காளியின் மூலம் இவர்கள் ஈட்டிய வருமானம்தான் பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. இவர், தக்காளி விற்று  ஒரே மாதத்தில் 1.5 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். 

மேலும் படிக்க | பிரதமர் மோடி, நடிகர் மாதவனுடன் பிரான்ஸ் அதிபர் எடுத்த ‘செல்பி’

துக்காராமிற்கு சொந்தமாக 18 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், 12 ஏக்கர் நிலத்தை இவர் விவசாயத்திற்காக பயன்படுத்துகிறாராம். தனது மகன் ஈஸ்வர் கயாக்கர் மற்றும் தனது மருமகள் சோனாலியின் உதவியுடன் இவர் தனது நிலத்தில் தக்காளியை பயிரிட்டு விற்பனை செய்து வந்துள்ளார். சிறந்த உரம் மற்றும் பூச்சு மருந்துகளின் உதவியுடன் தாங்கள் சிறந்த வகையிலான தக்காளிகளை விளைவிப்பதாக துக்காராமின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். 

ஒரு நாளுக்கு எவ்வளவு வருமானம் தெரியுமா..?

தக்காளி விவசாயி துக்காராம், தனது ஊரில், நாராயண்கி என்ற இடத்தில் உள்ள சந்தையில் 900 பெட்டி தக்காளிகளை விற்பனை செய்திருக்கிறாராம். முன்னர், தக்காளி விற்று ஒரு நாளைக்கு 2,100 ரூபாய் வரை மட்டுமே சம்பாதித்து வந்த அவர், இப்போது ஒரு நாளைக்கு 18 லட்சம் வரை சம்பாதித்துள்ளாராம். கடந்த மாதம் ஒரு தக்காளி பெட்டியை 1,000 ரூபாயில் இருந்து 2,400 ரூபாய் வரை விற்பனை செய்தாராம். புனே மாவட்டத்தில் உள்ள ஜுன்னூர் நகரில் உள்ள தக்காளி விவசாயிகள் பலர், இதே போல அதிகளவில் வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த பகுதியை சேர்ந்த தக்காளி விவசாயிகள், மொத்தமாக 80 கோடி வரை வருமானம் ஈட்டி உள்ளதகவும் இதனால் இந்த பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாவும் கூறப்படுகிறது. 

குடும்பமாக சேர்ந்து உழைப்பு..!

தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ள விவசாயி துக்காராமிற்கு அவரது குடும்பத்தினரும் பல்வேறு வகையில் உதவி செய்து வருகின்றனர். துக்காராமின் மருமகள் சோனாலி தக்காளியை பயிரிடுவது, உழுவது மற்றும் அதை பேக்கேஜிங் வேலைகளை பார்த்து கொள்வாராம். துக்காராமின் மகன் ஈஸ்வர் தக்காளி விற்பனை, மேலாண்மை மற்றும் பண பரிவர்தனைகளை பார்த்துக்கொள்வாராம். இவர்களது இந்த கடின முயற்சி இவர்களை கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ளதாக இந்த பகுதி மக்கள் பெருமிதம் கொள்கின்றனர். 

மகாராஷ்டிராவில் மட்டும் இது நடக்கவில்லையாம்..

ஒரு விவசாயி தக்காளி மட்டுமே விற்று பணக்காரராக மாறியது, மகாரஷ்டிராவில் மட்டும் நடக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள கோலார் நகரில் உள்ள ஒரு விவசாயி தக்காளி அடங்கிய 2,000 பெட்டிகளை விற்று ஒரே வாரத்தில் 38 லட்சம் வரை சம்பாதித்துள்ளாராம். தக்காளி விலையேற்றம் தாறுமாறாக எகிறியுள்ளதை தொடர்ந்து, அது பல விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது நல்ல விஷயம் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | அரசு அதிகாரிகளுக்கு பயங்கரவாத தொடர்பு... பணி நீக்கம் செய்த அரசு !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News