'என் தந்தையை துண்டு துண்டாக வீட்டுக்கு எடுத்து வந்தேன்' - பிரியங்கா காந்தி உருக்கம்

Priyanka Gandhi Slams PM Modi: நாட்டிற்கு தியாகம் செய்த பல்வேறு பிரதமர்களை தான் பார்த்திருப்பதாகவும், பொய் சொல்லும் பிரதமரை முதல்முதலாக இப்போதுதான் பார்ப்பதாகவும் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 27, 2024, 08:48 PM IST
  • 3ஆம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு பரப்பரப்பான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. ட
  • குஜராத்தில் பிரியங்கா காந்தி இன்று பரப்புரை மேற்கொண்டார்.
  • பிரதமர் மோடியை சராமாரியாக தாக்கினார்.
'என் தந்தையை துண்டு துண்டாக வீட்டுக்கு எடுத்து வந்தேன்' - பிரியங்கா காந்தி உருக்கம் title=

Priyanka Gandhi Slams PM Modi: 18வது மக்களவை தேர்தல் தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் நடைபெற உள்ளது. 

முதல்கட்ட வாக்குப்பதிவில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 102 தொகுதிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 88 தொகுதிகளிலும் என மொத்தம் 190 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. மொத்தம் 543 தொகுதிகள் உள்ள நிலையில் மீதும் உள்ள தொகுதிகளுக்கு மே 7, மே 13, மே 20, மே 26, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

3ஆம் கட்ட வாக்குப்பதிவு

அந்த வகையில் தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு கடும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தாத்ரா, நாகர் மற்றும் ஹாவேலி, தாமன் மற்றும் டையூ என 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 94 தொகுதிகளில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின் தொகுதிகளில் குஜராத்தில்தான் அதிகபட்ச வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்குள்ள 26 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவின் 11 தொகுதிகளிலும், உத்தர பிரதேசம் 10 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. 

மேலும் படிக்க | முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக SC, ST, OBC உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் முயற்சி -ஜே.பி. நட்டா

குற்றச்சாட்டும் மறுப்பும்

கடந்த இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை குறிப்பிட்ட பிரதமர் மோடியின் பேச்சு, வாரிசுரிமை வரி விவகாரம் என பல விஷயங்கள் அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கின. தற்போதைய மூன்றாம் கட்ட தேர்தல்  பரப்புரையில் கூட இதே விவகாரங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். 

குறிப்பாக, பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அது மக்களின் சொத்துகளை பிறருக்கு பகிர்ந்தளித்துவிடும் என்றும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். காங்கிரஸ் கட்சியினர் மீதும் கடும் புகார்களை கூறி வந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் தொடர்ந்து பதிலடியும் கொடுத்து வருகின்றனர். 

'துண்டு துண்டாக கொண்டு வந்தேன்'

இந்நிலையில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் வால்சத் மாவட்டத்தின் தரம்பூர் கிராமத்தில் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில்,"எனது குடும்பத்தில் இருந்து மட்டுமல்ல, பல்வேறு பிரதமர்களை நான் பார்த்துள்ளேன். இந்திரா காந்தியும் அதில் ஒருவர், அவர் இந்த நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்தவர். ராஜீவ் காந்தியும் பிரதமராக இருந்தார். அவரை நான் வீட்டிற்கு துண்டு துண்டாக கொண்டு வந்தேன், அவர் தனது உயிரை நாட்டிற்காக தியாகம் செய்தவர்.

மன்மோகன் சிங் இந்த நாட்டில் ஒரு புரட்சியை கொண்டு வந்தார். காங்கிரஸ் கட்சியாக இல்லாவிட்டாலும் அடல் பிஹாரி வாஜ்பாய் குறைந்தபட்சம் நாகரீகமானவர் எனலாம். முதல்முறையாக பொதுவெளியில் பொய் சொல்லும் பிரதமர் இவராகதான் இருப்பார்.

'இதுதான் அவர்களின் தந்திரம்'

"அவர் இப்போது விழிப்புடன் இருக்குமாறு மக்களை எச்சரிக்கிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, உங்களிடம் இருப்பதைப் பார்த்து, உங்கள் ஆபரணங்கள், தாலியை பறித்து வேறு ஒருவரிடம் கொடுக்கும் என்று அவர் கூறுகிறார். ஒரு பிரதமர் இதைச் சொல்கிறார். இது உண்மையாக இருக்கக்கூடுமா என்ன? நமது தேர்தல் அறிக்கையின் மீது அவருக்கு என்ன பிரச்னை...?

அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று பாஜக தலைவர்கள், அமைச்சர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் பல இடங்களில் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், தங்களுக்கு அப்படி எந்த நோக்கமும் இல்லை என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். இவர்களின் வரலாறை நாம் திரும்பிப் பார்த்தால், கட்சி என்ன செய்யப் போகிறது என்பதை இரண்டாம் கட்ட தலைவர்களை சொல்லவைத்து, அதனை மறுபுறத்தில் மறுப்பார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஆட்சிக்கு வந்தவுடனே செய்யமாட்டோம் என கூறிய காரியத்தை செயல்படுத்துவார்கள். இதுதான் அவர்களின் தந்திரம், அவர்களின் வழிமுறை. ஜனநாயகத்தையும் மக்களையும் வலுவிழக்கச் செய்து அவர்களின் உரிமைகளைப் பறிக்க அரசியல் சட்டத்தை மாற்ற நினைக்கிறார்கள்" என்றார். 

மேலும் படிக்க | காங்கிரஸ் முக்கிய கூட்டம்...அமேதி, ரேபரேலி தொகுதிகளின் வேட்பாளர்கள் யார்? சஸ்பென்சுக்கு இன்று முற்றுப்புள்ளி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News