மும்பையின் முக்கிய தொகுதி... பாஜக இறக்கிய 'பயங்கர வேட்பாளர்' - யார் இந்த உஜ்வல் நிகாம்?

Lok Sabha Election 2024: 2008இல் மும்பையின் பல இடங்களின் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்பட்ட உஜ்வல் நிகாமை (Ujjwal Nikam) பாஜக, வடகிழக்கு மும்பை தொகுதியில் களமிறக்கியிருக்கிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 27, 2024, 09:54 PM IST
  • பயங்கரவாதி அஜ்மல் கசாப்பிற்கு தண்டனை பெற்ற தந்தவர் ஆவார்.
  • இவரின் நீதிமன்ற வாதங்களால் அதிகம் அறியப்பட்டவர்.
  • இந்த தொகுதி, மும்பையின் முக்கிய பகுதியாகும்.
மும்பையின் முக்கிய தொகுதி... பாஜக இறக்கிய 'பயங்கர வேட்பாளர்' - யார் இந்த உஜ்வல் நிகாம்? title=

Lok Sabha Election 2024: 18வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் முதலிரண்டு கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. இன்னும் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 190 தொகுதிகளில் இதுவரை வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளன. இன்னும் 353 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அந்த வகையில், அடுத்ததாக மூன்றாம் கட்டமாக 12 மாநிலங்களின் 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குறிப்பாக, பாஜகவின் பலமான பகுதிகள் என கூறப்படும் குஜராத், மகாராஷ்டிராவில் இந்த கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குஜராத்தின் 26 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவின் 11 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆளும் பாஜக இவற்றை கைப்பற்ற முனைப்போடு களத்தில் செயலாற்றி வருகிறது.

யார் இந்த உஜ்வல் நிகாம்?

அந்த வகையில் வடகிழக்கு மும்பை மக்களவை தொகுதியில் பாஜக தற்போது வேட்பாளரை மாற்றியிருக்கிறது. அதுவும் தற்போதைய எம்பியை மாற்றி, வேறொரு பிரபலத்தை அங்கு நிறுத்தியுள்ளது. 2008ஆம் ஆண்டு நவ. 26ஆம் தேதி மும்பையின் பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்த உஜ்வல் நிகம் என்பவரை பாஜக தற்போது வடகிழக்கு மும்பை தொகுதியின் வேட்பாளராக அறிவித்துள்ளது. உஜ்வல் நிகம்தான் இந்த குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய பயங்கரவாதியான அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 'என் தந்தையை துண்டு துண்டாக வீட்டுக்கு எடுத்து வந்தேன்' - பிரியங்கா காந்தி உருக்கம்

தற்போது அந்த தொகுதியில் பாஜகவின் பூனம் மகாஜன் என்ற பெண்மணி எம்பியாக உள்ளார். இவர் 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்றார். இவர் பாஜகவின் முன்னாள் இளைஞரணி தலைவர் ஆவார். பூனம் மகாஜனின் சகோதரர் பிரவின் அவரது தந்தையான பிரமோத் மகாஜனை கடந்த 2006ஆண் ஆண்டு ஏப்ரல் மாதம் சுட்டுக்கொன்றார். 

குறிப்பாக, பிரமோத் மகாஜன் கொலை வழக்கிலும் அரசு தரப்பு வழக்கறிஞராக அதே தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிஹாமே ஆஜரானார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பூனம் மகாஜனை நீக்கியது கட்சியின் முடிவு என அம்மாநில பாஜக தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். 

மும்பையின் முக்கிய தொகுதி

வடகிழக்கு மும்பை தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், உஜ்வல் நிகம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக நான் போராடியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இன்று பாஜக ஒரு பொறுப்பை வழங்கியிருக்கிறது, இதற்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மகாராஷ்டிர பாஜக மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே, மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலார் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

எனக்கு அரசியல் பழக்கப்பட்டது இல்லை என்பது தெரியும், இருப்பினும் நாட்டின் அரசியலமைப்பு, சட்டம், பாதுகாப்பு ஆகியவைதான் எனது முன்னுரிமை என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்னை போட்டியிடும்படி கட்சி அறிவித்துள்ள தொகுதி என்பது மும்பையிலேயே மிகவும் முக்கியமான தொகுதி ஆகும். மனோகர் ஜோஷி, ராம்தாஸ் அத்வாலே, பூனம் மகாஜன் உள்ளிட்டோர் இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த தொகுதிக்காக மக்களவையில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளனர்" என்றார். 

எப்போது இங்கு தேர்தல்?

பூனம் மகாஜன் இந்த தொகுதியில் இருந்து நீக்கப்படுவார் என பல நாள்களாக கூறப்பட்டு வந்தாலும், அவருக்கு மாற்று வேட்பாளரை தேர்வு செய்யவே இத்தகைய கால தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நீதிமன்ற வட்டாரத்தில் உஜ்வல் நிகம் மிகவும் பரவலாக அறியப்பட்டவர். இவரின் ஒன்லைன் பஞ்ச் வசனங்கள், வாதங்கள் ஆகியவை பலரையும் பல சந்தர்ப்பங்களில் ஈர்த்துள்ளது. இவரின் வாதங்கள் சலிப்பை ஏற்படுத்தாது, நீதிமன்றத்தில் கடினமான சூழ்நிலையில் கூட நகைச்சுவையாக பேசி அந்த பகுதியையே வேறொரு சூழலுக்கு மாற்றிவிடுவார் என கூறப்படுகிறது. 

காங்கிரஸ் இந்த தொகுதியில் மும்பை காங்கிரஸ் தலைவரும், தாராவி எம்எல்ஏவுமான வர்ஷா கெய்க்வாட்டை களமிறக்கி உள்ளது. இந்த தொகுதியில் வரும் மே 20ஆம் தேதி, அதாவது 5ஆம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | காங்கிரஸ் முக்கிய கூட்டம்...அமேதி, ரேபரேலி தொகுதிகளின் வேட்பாளர்கள் யார்? சஸ்பென்சுக்கு இன்று முற்றுப்புள்ளி?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News