பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய் உரைகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்: வைகோ அறிக்கை

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தவுடன், ஏப்ரல் 21ஆம் நாள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி முஸ்லிம்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அவரது ரத்த அணுக்களில் ஊடுருவி இருக்கின்ற இஸ்லாமிய வெறுப்பை காட்டுகின்றன: வைகோ

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 16, 2024, 01:15 PM IST
  • பாஜக தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை செயல்படுத்துவோம் என்று பிரகடனம் செய்திருப்பது இந்துத்துவா செயல் திட்டத்தின் ஒரு கூறு தானே?
  • பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு அறிக்கை வெளியிட்டிருப்பதன் நோக்கம் எதை காட்டுகிறது?
  • மக்களிடம் வேற்றுமை விதைகள் தூவப்பட்டதைப் போன்ற நிலையை இந்துத்துவா சக்திகள் உருவாக்க நினைக்கின்றன.
பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய் உரைகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்: வைகோ அறிக்கை title=

பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய் உரைகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

வைகோ தனது அறிக்கையில், ‘மக்களவைத் தேர்தலுக்கு வாரணாசி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த பிரதமர் நரேந்திர மோடி, அதே நாளில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருக்கிறார்.

பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தவர் பத்திரிக்கை ஊடகங்களைச் சந்தித்து கேள்விகளை எதிர்கொள்வதற்கு திராணி இல்லாத நிலையில், அவ்வப்போது தமது கருத்துக்களை விருப்பப்படுகிற அல்லது தனக்கு வேண்டிய தொலைக்காட்சி ஊடகங்களில் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தாம் முஸ்லிம்கள் குறித்து எதுவும் பேசவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் கூறி இருக்கிறார்.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தவுடன், ஏப்ரல் 21ஆம் நாள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி முஸ்லிம்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அவரது ரத்த அணுக்களில் ஊடுருவி இருக்கின்ற இஸ்லாமிய வெறுப்பை காட்டுகின்றன என்று நான் அறிக்கை தந்தேன்.

காங்கிரசின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போன்றிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பிரதமர் மன்மோகன் சிங் தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார், அதன் பொருள் அவர்கள் இந்த செல்வத்தை அதிக குழந்தையைப் பெற்றவர்களுக்கும் ஊடுருவல் காரர்களுக்கும் பகிர்ந்து அளிப்பார்கள்.

பெண்களின் தாலியை கூட விட்டு வைக்க மாட்டார்கள் என்று மோடி பேசியது உண்மையா? இல்லையா? ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை பறித்து, மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது என்று குற்றம் சாட்டினாரே? மக்கள் மறந்து விடுவார்களா? மேற்குவங்கத்தில் நடந்த தேர்தலில் பிரச்சார கூட்டத்தில், மதத்தின் அடிப்படையில் யாரும் இட ஒதுக்கீடு பெற முடியாது; சி ஏ ஏ சட்டத்தை யாராலும் திரும்ப பெற முடியாது; என்று குறிப்பிட்டாரே நரேந்திர மோடி, அது இஸ்லாமியர்களை குறி வைத்து தான் என்பதை மறுக்க முடியுமா?

பாஜக தேர்தல் அறிக்கையில்  பொது சிவில் சட்டத்தை செயல்படுத்துவோம் என்று பிரகடனம் செய்திருப்பது இந்துத்துவா செயல் திட்டத்தின் ஒரு கூறு தானே? பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருப்பதும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கட்டாயமாக அமல்படுத்துவோம் என்று மோடியும் அமித்ஷாவும் பேசி வருவது முஸ்லிம்களுக்கு எதிரானது தானே?

மேலும் படிக்க | 1.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா... வாகன சோதனையில் மடக்கி பிடித்த மடிப்பாக்கம் போலீஸ்

நாடாளுமன்றத் தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கின்ற போது பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு 2015ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையை இப்போது வெளியிட்டு இந்தியாவில் இந்துக்களின் மக்கள் தொகை 84 சதவீதத்திலிருந்து 78 சதவீதமாக குறைந்துவிட்டது.

ஆனால் முஸ்லிம்களின் மக்கள் தொகை 9.84 சதவீதத்திலிருந்து 14.09 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு அறிக்கை வெளியிட்டிருப்பதன் நோக்கம் எதை காட்டுகிறது? 1947 நாட்டு பிரிவினை காலகட்டத்தில் இந்து- முஸ்லிம் பிரிவினைவாத கருத்துக்களால் மக்களிடம் வேற்றுமை விதைகள் தூவப்பட்டதைப் போன்ற நிலையை  இந்துத்துவா சக்திகள் உருவாக்க நினைக்கின்றன.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மிகக் கடுமையாக இஸ்லாமிய வெறுப்பை கக்கிவிட்டு, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அலை பெருகி கொண்டிருப்பதனால், தொலைக்காட்சி நேர்காணலில் பிரதமர் மோடி தான் பேசியவற்றை மூடி  மறைக்கப் பார்க்கிறார். “இந்து - முஸ்லிம் அரசியல் பேசத் தொடங்கினால் அந்த நாள் முதல், நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன்” என்று பிரதமர் மோடி கூறி இருப்பதன் நோக்கத்தை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

பிரதமர் அள்ளி வீசி வரும் அவதூறுகளையும் பொய் உரைகளையும் புறக்கணித்து இந்திய நாட்டு மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பதிலடியை கொடுப்பார்கள்” என்று கூறியுள்ளார். 

மேலும் படிக்க | குடும்பத்தினர் முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி! சென்னையில் பரபரப்புக் கொலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News