சில்லு சில்லாக நொறுங்கிய சிஎஸ்கே... சுதர்சன் - கில் படைத்த பிரம்மாண்ட சாதனை!

GT vs CSK Match: சிஎஸ்கே அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் அணி 231 ரன்களை குவித்த நிலையில், சாய் சுதர்சன் மற்றும் சுப்மான் கில் இருவரும் சதம் அடித்து மிரட்டினர். இந்த போட்டியில் அவர்கள் படைத்த தனித்துவமான சாதனையை இங்கு காண்போம்.

  • May 10, 2024, 22:04 PM IST

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே குஜராத் அணி பிளே ஆப் ரேஸில் தொடர முடியும். சென்னை அணிக்கும் இது முக்கியமான போட்டியாகும்.

 

1 /7

நடப்பு ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் சந்தித்தது. போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச முடிவெடுத்தார்.   

2 /7

ஆனால், இந்த முடிவு சிஎஸ்கே அணிக்கே பின்னடைவாக அமைந்தது. சுப்மான் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாட தொடங்கினர். இதனால், பவர்பிளே முடிவில் இந்த ஜோடி 58 ரன்களை குவித்தது.   

3 /7

அதன்பின்னும் அவர்கள் சிறப்பாகவே விளையாடினார். 7 - 16 ஓவர்கள் வரை 138 ரன்களை குவித்தனர். அதாவது 16 ஓவர்களில் 196 ரன்களை குஜராத் அணி குவித்தது. இருவரும் 50 பந்துகளில் தங்களின் சதத்தை பதிவு செய்தனர். சுப்மான் கில்லுக்கு இது 4வது ஐபிஎல் சதமாகும், சாய் சுதர்சனுக்கு இது முதல் ஐபிஎல் சதமாகும்.   

4 /7

இந்த ஜோடி 210 ரன்கள் எடுத்து பிரிந்தது. தேஷ்பாண்டே வீசிய 18வது ஓவரில் சாய் சுதர்சன் 51 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளும் உள்பட 103 ரன்களை எடுத்தும், அதே ஓவரில் சுப்மான் கில் 55 பந்துகளில் 6 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் உள்பட 104 ரன்களை எடுத்தும் ஆட்டமிழந்தனர். 

5 /7

கடைசி 3 ஓவர்களில் குஜராத் அணியால் 22 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களை எடுத்தது. மில்லர் 16 ரன்களுடனும், ஷாருக்கான் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.   

6 /7

சாய் சுதர்சன் - சுப்மான் கில் ஜோடி 210 ரன்களை குவித்தது அதிக ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சாதனையை சமன் செய்தது. 2022ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக லக்னோ அணி தரப்பில் கேஎல் ராகுல் - குவின்டன் டி காக் ஜோடி 210 ரன்களை எடுத்திருந்தது.   

7 /7

232 ரன்களை துரத்தும் சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்துள்ளது. ஓப்பனர்களான ரச்சின் மற்றும் ரஹானே ஆகியோர் தலா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கெய்க்வாட் டக் அவுட்டானார்.