திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா? தேர்தல் ஆணையம் விளக்கம்

Thirukovilur Constituency: பொன்முடி வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், அது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 16, 2024, 07:25 PM IST
  • திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தலா?
  • தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் வந்த குழப்பம்
  • தமிழக தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு விளக்கம்
திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா? தேர்தல் ஆணையம்  விளக்கம் title=

லோக்சபா தேர்தல் தேதிகளை அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளையும் அறிவித்திருக்கிறது. அத்துடன், மாநில சட்டமன்ற காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருகிறது. அந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். அதனால் அந்த தொகுதி காலியான நிலையில், நாடாளுமன்ற தேர்தலோடு ஏப்ரல் 19 ஆம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு... தமிழ்நாட்டில் எப்போது தெரியுமா?

இதேபோல் திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைய அறிவிப்பில் இடம்பெற்றிருந்தது. அந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டதையடுத்து, அந்த தொகுதியை காலியானதாக அறிவித்தது சட்டப்பேரவை செயலகம். இருப்பினும் அவர் குற்றவாளி என்ற தீர்ப்பையும், தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக தொடர்வதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. 

இந்த சூழலில் தான் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் அறிவிப்பில் தமிழ்நாட்டில் திருக்கோவிலூர் தொகுதியும் இடம்பெற்றிருந்தது. இது குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு கொடுத்த விளக்கத்தில், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை என தெரிவித்துள்ளார். முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் திருக்கோவிலூர் தொகுதி முதல் அறிவிப்பில் தவறுதலாக இடம்பெற்றுவிட்டதாக கூறிய அவர், தேர்தல் தேதி அட்டவணையில் திருக்கோவிலூர் தொகுதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

இதன்மூலம் தமிழ்நாட்டில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டும் ஏப்ரல் 19 ஆம் தேதி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குபதிவு நடைபெற இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. இதனிடையே, பொன்முடி எம்எல்ஏவாக நீடிப்பது தேர்தல் ஆணையத்தாலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அவர் விரைவில் அமைச்சர் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு திரும்பியதும் பொன்முடி அமைச்சரவையில் இடம்பெற இருக்கிறார். பொன்முடியை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்என் ரவிக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Zee News தேர்தல் கருத்துக்கணிப்பு: மோடி vs ராகுல்... அரியணை ஏறப்போவது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News