'பொய் கணக்கு காட்டும் பாஜக... எங்கள் காதுகள் பாவமில்லையா' - லிஸ்ட் போட்டு காட்டிய ஸ்டாலின்!

MK Stalin Latest News: 'பாஜக கூறும் எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா' என மத்திய அரசு மீது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 14, 2024, 04:56 PM IST
  • 10 ஆண்டுகளில் ரூ.10.76 லட்சம் கோடியை கொடுத்ததாக பாஜக கூறுகிறது, இது பொய் - ஸ்டாலின்
  • தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே - ஸ்டாலின்
  • உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி அளித்த பாஜக - ஸ்டாலின்
'பொய் கணக்கு காட்டும் பாஜக... எங்கள் காதுகள் பாவமில்லையா' - லிஸ்ட் போட்டு காட்டிய ஸ்டாலின்!  title=

MK Stalin Slams Union BJP Government: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அவரது X பக்கத்தில் ஆளும் மத்திய பாஜக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் அந்த பதிவில், "கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் ஒன்றிய பாஜக அரசு... இது அப்பட்டமான பொய்க்கணக்கு!

நேரடியாக வழங்கும் நிதி...

இதில் இரண்டு கூறுகள் உள்ளன. முதலாவது: ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி. அதாவது, ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது. இதன்கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே!

திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு...

இரண்டாவது: ஒன்றிய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு. இதில் பாஜக காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா? இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1,960 கோடி; ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி; சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என்று, ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு.

மேலும் படிக்க | தேசிய கொடி நிறத்தை காவியாக மாற்ற பாஜக சதி செய்கிறது - லியோனி எச்சரிக்கை

எங்கள் காதுகள் பாவமில்லையா

இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு,  விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா?. இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது!

தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழ்நாட்டின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக்கொள்கிறது ஒன்றிய பாஜக அரசு.  எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா" என குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழலில் தேர்தல் களம் அனல் பறக்கிறது. 

பாஜகவின் தேர்தல் அறிக்கை 2024

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக இன்றுதான் அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தென்னிந்தியாவில் புல்லட் ரயில் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. டெல்லி பாஜக தலைமையகத்தில் இன்று மோடியின் உத்தரவாதம் 2024 (Modi Guarantee 2024) என்ற பெயரில் வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் 'தேர்தல் அறிக்கை'-ஐ பிரதமர் மோடி வெளியிட்டார். 

பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கையின் முக்கிய குறிக்கோள் மகளிர், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுதான் என குறிப்பிட்டுள்ளனர். பாஜக இதனை புரட்சிக்கரமான தேர்தல் அறிக்கை என கூறிய நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாஜகவின் தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

ஆட்சிக்காலத்தில் எதுவுமே செய்யப்படவில்லை

இதுகுறித்து பேசியபோது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, விவசாயிகளின் வருவாய் இரு மடங்காக்கப்படும் என்றும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் நேரந்தி மோடி முன்னரே வாக்குறுதி அளித்திருந்தார், அது நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தார்.

தொடர்ந்து அவர்,"இதுதான் அவரின் உத்தரவாதம். நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை தரும் எந்த ஒரு பெரிய பணியையும், திட்டத்தையும் அவர் தனது பதவிக்காலத்தில் செய்யவில்லை என்பது இந்த தேர்தல் அறிக்கை மூலம் தெரியவருகிறது. இளைஞர்கள் வேலை தேடி அலைக்கின்றனர், பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, ஆனால் அவர் எதைப் பற்றியும் கவலைப்படுவதே இல்லை" என்றார்.

மேலும் படிக்க | அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகம், வரலாற்றை தெரிஞ்சுக்க தம்பி - ஜெயக்குமார் விளாசல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News