’ஜாதிவெறி பேச்சு’ நாமக்கல் வேட்பாளரை மாற்ற கோரிக்கை! திமுக தலைமை கவனிக்குமா?

நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சூரியமூர்த்தி பேசிய பழைய ஜாதிவெறி பேச்சு வீடியோக்கள் வைரலாக பரவிக் கொண்டிருப்பதால் அவரை மாற்றி, புதிய வேட்பாளர் அறிவிக்க வேண்டும் என திமுக ஆதரவாளர்களே குரல் கொடுத்துள்ளனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 19, 2024, 03:46 PM IST
  • நாமக்கல் வேட்பாளரின் ஜாதி வெறிப்பேச்சு
  • வேட்பாளருக்கு எதிராக கடும் விமர்சனம்
  • மாற்று வேட்பாளரை அறிவிக்க கோரிக்கை
’ஜாதிவெறி பேச்சு’ நாமக்கல் வேட்பாளரை மாற்ற கோரிக்கை! திமுக தலைமை கவனிக்குமா? title=

நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறையும் இந்த தொகுதியில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வெற்றி பெற்றது. கடந்த முறை ஏகேபி சின்ராஜ் அக்கட்சி வேட்பாளராக நின்று வென்றநிலையில் அவர் இம்முறை தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என வெளிப்படையாக அறிவித்தார். அதனால் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் இளைஞர் அணி செயலாளராக இருக்கும் சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருக்கிறார். 

ஆனால் அவரை மாற்ற வேண்டுமென இப்போது திமுக ஆதரவாளர்களே திமுக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்குக் காரணம் சூரியமூர்த்தி, ஜாதி ஆணவக் கொலையை ஆதரித்து பேசியது தான். "தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் வரக்கூடாது. அப்படி வருமானால் அவர்களை மட்டுமல்லாது அந்த இளைஞர்களின் தாயையும் சேர்த்து கொன்று விடுவோம்" என பேசி இருக்கிறார். தங்கள் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் திருமணம் ஆகாமல் இருக்கும் நிலையில், தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்கள் குறிவைத்து தங்கள் சமூக பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள், இதனையெல்லாம் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். கொலை செய்ய அஞ்சமாட்டோம், அதன் பிறகு சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறோம்" என பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க - ’தேசநலன் கருதி’ பாமக எடுத்த கூட்டணி முடிவு - பாஜகவுடன் சேரப்போகிறது! அதிமுக ஏமாற்றம்

வன்முறையை தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவர் இப்படி பேசிய வீடியோக்கள் இப்போது எக்ஸ் பக்கம், முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்படி பேசி இருக்கும் சூரிய மூர்த்திக்கு ஆதரவாக எப்படி பிரச்சாரம் செய்யப் போகிறது? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் வழியில் சமூக நீதியை கட்டமைக்க பாடுபட்டு வரும் திமுகவில் ஜாதி வெறி பிடித்த இப்படி ஒருவரை எப்படி உதயசூரியனில் நிற்க வைக்கிறீர்கள் என திமுக தலைமையை நோக்கி கடுமையான விமர்சனங்களும் கேள்வியும் திமுக தொண்டர்களே எழுப்பியுள்ளனர்.

அப்பட்டமான ஜாதி வெறி, கொலை செய்ய தூண்டும் பேச்சுகளை பேசிய சூர்யமூர்த்திக்கு ஆதரவாக திமுக வாக்கு கேட்டு வெற்றி பெற வைக்க பாடுபடுவது எந்த மாதிரியான அணுகுமுறை?, சமூக நீதி மீது துளியேனும் அக்கறை இருந்தால் வேட்பாளராக இருக்கும் சூர்யமூர்த்தியை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஒருவேளை அவரே வேட்பாளராக நிற்கும்பட்சத்தில் வெற்றி வாய்ப்பை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் திமுகவினரும், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அறப்போர் இயக்கமும் இது குறித்து எக்ஸ் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில், ’திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் KDMK வேட்பாளர் சூரியமூர்த்தி 10 வருடங்களுக்கு முன்பு பேசிய வெறுப்பு பேச்சு அடங்கிய காணொளி. சிறையில் இருக்க வேண்டிய இந்த நபருக்கு பாராளுமன்ற வேட்பாளராக சீட் கொடுப்பது தான் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் சமூக நீதியா? ஆணவக்கொலையை ஆதரித்து பேசுபவரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பது தான் உங்கள் கொள்கையா?, இவர் 2016 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இவர் மீது மோசடி, திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் (IPC Section 307, 326, 395, 397) இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையம் என்ன செய்ய போகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் படிக்க | எங்களுக்கு கிடைத்திருக்கும் ஆதரவை பார்த்து திமுக-வின் துக்கம் தொலைந்துவிட்டது -பிரதமர் மோடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News