AIADMK Vs BJP: டெல்லியில் அண்ணாமலை.. அமைதியாக இருங்கள்.. எச்சரித்த மேலிடம்!

K Annamalai In Tamil Nadu: அதிமுக கூட்டணி முறிவை அடுத்து முதல் முறையா டெல்லி சென்ற அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 3, 2023, 12:09 PM IST
  • தமிழ்நாட்டில் தனி அணி அமைக்க டெல்லி பாஜக அனுமதி. அண்ணாமலை ஹேப்பி.
  • தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு.
  • கட்சித் தலைவர் பதவி என்பது "ஒரு வெங்காயம்" போன்றது - அண்ணாமலை
AIADMK Vs BJP: டெல்லியில் அண்ணாமலை.. அமைதியாக இருங்கள்.. எச்சரித்த மேலிடம்!  title=

புது டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் அதிமுக உறுதியாக உள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று (2023 அக்டோபர் 2, திங்கள்கிழமை) டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதிமுக கட்டணி முறிவுக்கு முக்கிய காரணம் அண்ணாமலை என்பதால், அவர் மீது பிரதமர் மோடி (Indian Prime Minister Narendra Modi) மற்றும் அமித்ஷா கோபத்தில் இருப்பதால் அண்ணாமலை சந்திக்க மறுத்து விட்டதாகத் தகவல். இதனால் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மற்றும் நிர்மலா சீதாராமன் உடன் மட்டும் சந்தித்து பேசியுள்ளார். 

தமிழ்நாட்டில் தனி அணி அமைக்கும் பாஜக?

அந்த சந்திப்பில், தன் மீது தவறு இருக்கும் பட்சத்தில், தான் ராஜினாமா செய்வதாக அண்ணாமலை (Tamil Nadu BJP State President K Annamalai) கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த தலைவர்கள், இனி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதால், தமிழ்நாட்டில் தனி அணி அமைக்க அனுமதி அளித்துள்ளனர். இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பது தெளிவாகிவிட்டது.

மேலும் படிக்க - பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? எடப்பாடி பழனிச்சாமி பகீர் குற்றச்சாட்டு!

இனி வாய்ப்பில்லை.. பாஜக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி - பழனிசாமி

மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என்பது அஇஅதிமுகவின் (All India Anna Dravida Munnetra Kazhagam) ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு. பாஜக கூட்டணி இருந்து வெளியேறுவது குறித்து பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு அல்ல, ஒட்டுமொத்த அதிமுக முடிவு. அதிமுகவை பொறுத்த வரையில் மக்களுக்கு சேவை செய்தும் இயக்கம். இனி தமிழகத்தில் அஇஅதிமுக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். இங்கே பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்கிறார்கள் , ஒரிசாவில் நவீன் பட்நாயக்கோ அல்லது போன தேர்தலில் மம்தா பானர்ஜியோ, யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லியா வாக்கு கேட்டார்கள். பல மாநிலங்களில் பல மாநில கட்சிகள் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் பிரதமரை தேர்ந்தெடுக்கிறார்கள். 

அதுபோலத்தான் அதிமுகவும் தமிழகத்தில் கூட்டணி அமைத்து அதிக வெற்றி பெற்று தமிழகத்தின் உரிமைக்காகவும் , தமிழகத்தின் நன்மைக்காகவும் பாடுபடுவோம். இங்கே தொலைக்காட்சி விவாதங்களில் இனி யாரும் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்று பேசத் தேவையில்லை அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது என சேலம் மாவட்ட  அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi K. Palaniswami) தெரிவித்தார்.

அதிமுக - பாஜக இடையே பிரச்சனைக்கு காரணம் என்ன?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக இடம் பெற்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் (Lok Sabha Election 2019) பாஜக, அதிமுக உட்பட கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளிலும் போட்டயிட்டது. ஆனால் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் தோல்வியை தழுவியது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம் பெற்றது. அதில் அதிமுக 66 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அதிமுக, பாஜக இடையே கருத்து மோதல் உருவானது. தனக்கென ஒரு தனி ரூட் போட்டுக்கொண்டு, தமிழகத்தில் பாஜகவை வளர்க்க போகின்றேன் என்ற பெயரில், கூட்டணி கட்சி உட்பட அனைத்து கட்சிகளையும் கடுமையாக விமர்ச்சிக்க தொடங்கினார். குறிப்பாக கூட்டணியில் உள்ள அதிமுக கட்சியின் ஊழல்களை குறித்து பேசிய அண்ணாமலை, முன்னாள் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா மற்றும் அண்ணா குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.

மேலும் படிக்க - முறிந்தது அதிமுக - பாஜக கூட்டணி: இன்றும்... என்றும் இல்லை... இபிஎஸ் அதிரடி முடிவு!

அதிமுக - பாஜக உச்சக்கட்ட மோதல்

அதிமுக மற்றும் அதன் தலைவர்களை தொடர்ந்து அண்ணாமலை அவமதித்து வருகிறார். கூட்டணி தர்மத்தை மீறுகிறார். இனி பொறுத்துக்கொள்ள முடியாது என அதிமுகவினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த உச்சக்கட்ட மோதலை அடுத்து, தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும். இல்லை என்றால் கூட்டணி கிடையாது என்று அதிமுக தரப்பில் தெளிவாகக் கூறப்பட்டது. ஆனால் பாஜக மேலிடம் அண்ணாமலையை மாற்றப் போவதில்லை எனத் தெரிந்ததை அடுத்து, கடந்த 25ம் தேதி எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் அதிமுக - பாஜக கூட்டணி (AIADMK BJP Alliance) முடிவுக்கு வந்தது

அண்ணாமலை சந்திக்க மோடி, அமித் ஷா மறுப்பு

இதனையடுத்து அவசரம் அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்ற அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார். ஆனால் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா (Home Ministry Amit Shah) சந்திக்க மறுத்து விட்டனர்.

அண்ணாமலை ராஜினாமா செய்கிறாரா?

தென்மா நிலங்களில் பாஜகவுக்கு போதிய செல்வாக்கு இல்லை. தற்போது அதிமுகவுடன் கூட்டணி முறிவு. தற்போது பாஜகவை மேலும் பலவீனப்படுத்தி விட்டீர்கள் என அண்ணாமலையை கடிந்து கொண்டுள்ளனர். இறுதியாக என்ன செய்வதென்று தெரியாமல், "நான் ராஜினாமா செய்கிறேன்" என்று கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஜேபி நட்டா, தற்போதிய சூழலில் நீங்கள் (அண்ணாமலை) ராஜினாமா செய்தால், அதிமுகவினருக்காக இறங்கிப் போனதுபோல ஆகிவிடும். அது நல்லதல்ல, எனவே ராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளனர். தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துங்கள், அதேநேரத்தில் அதிமுக குறித்தோ, கூட்டணி குறித்தோ பேச வேண்டாம். தேர்தல் நெருங்கும் நேரத்தில், தனி அணி அமைப்பதா அல்லது கூட்டணி அமைப்பதா என்பதை பார்த்துக் கொள்ளலாம் என ஜேபி நட்டா கூறியதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க- அதிமுக - பாஜக கூட்டணி முறிவு... அண்ணாமலையின் முதல் ரியாக்சன் இதுதான்!

பாஜக கட்சித் தலைவர் பதவி "வெங்காயம்" போன்றது -அண்ணாமலை

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்படும் முன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமல, "அதிமுக-பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவு பாஜகவுக்கு பின்னடைவு அல்ல. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தன்மை மற்றும் அமைப்பு குறித்து கட்சியின் தேசிய தலைமை சரியான நேரத்தில் பேசும். அரசியலில், சில முன்னேற்றங்கள் நீண்ட காலத்திற்கு வரப்பிரசாதமாக இருக்கும். மேலும் என்னை பொறுத்த வரை கட்சித் தலைவர் பதவி என்பது "ஒரு வெங்காயம்" போன்றது. வெங்காயத்தை உரித்துப் பார்த்தால் உள்ளே எதுவும் இருக்காது. எனவே நான் பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. இதைவிட பெரிய பவரைப் பார்த்தவன். பெரிய பதவியில் இருந்தவன் இந்த அண்ணாமலை. எனக்கென ஒரு தனி உலகம் இருக்கிறது. அதில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். இந்த அட்ஜெஸ்மென்ட் பாலிடிக்ஸ் என்னிடம் கிடையாது என்று கூறினார்.

பெண் நிருபரிடம் கோபமடைந்த அண்ணாமலை

மேலும் தன்னிடம் கேள்வி கேட்ட பெண் நிருபரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடந்துகொண்ட விதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது அண்ணாமலையிடம், நீங்கள் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், பாஜகவில் தொடர்ந்து நீடிப்பிங்களா? என்று கேட்டதற்கு, வாங்க, வந்து என் பக்கத்தில் நில்லுங்க.. அப்பொழுது தான் கேமராவில் உங்கள் முகம் தெரியும். யார் அந்தக் கேள்வியைக் கேட்டார்கள் என்று டி.வி. மூலமா மக்கள் பார்க்கட்டும். கேள்வி கேக்க ஒரு வழி இருக்கு. எட்டு கோடி பேர் தெரிஞ்சுக்கணும்.. இப்படி ஒரு புத்திசாலித்தனமான கேள்வி கேட்டவர் யார்னு தெரிஞ்சுக்கணும் என்று பெண் நிருபரை கேமராக்கள் முன் நிற்கும்படி தொடர்ந்து பலமுறை கேட்டுக் கொண்டார். சக பத்திரிகையாளர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

மேலும் படிக்க - திமுக அரசை விமர்சித்து விஜய் ரசிகர் ஒட்டி உள்ள போஸ்டரால் பரபரப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News