உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம்!!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், குரேஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பிரான்ஸ்.

Last Updated : Jul 16, 2018, 10:35 AM IST
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம்!! title=

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், குரேஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பிரான்ஸ்.

ரஷ்யாவில் 21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் முறையாக, இறுதி போட்டியில் பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, ஸ்பெயின் போன்ற பெரிய அணிகள் இல்லாவிட்டாலும், உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான கால்பந்து ரசிகர்கள் இந்த போட்டியை பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியின் 18வது நிமிடத்தில், குரேஷியாவுக்கு காத்திருந்தது மிகப்பெரிய ஷாக். அந்த அணியின் மாண்ட்சுகிச், தவறுதலாக ஓன் கோல் அடித்து பிரான்சுக்கு முன்னிலை கொடுத்தார். பின், குரேஷியா கோல் அடிக்க கடும் முயற்சி செய்தது. அதற்கு பலனாக, 28வது நிமிடத்தில், அந்த அணியின் இவான் பெரிசிச் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். 38வது நிமிடத்தில், பிரான்சுக்கு கிடைத்த ஒரு கார்னர் கிக் வாய்ப்பில், தூக்கி அடிக்கப்பட்ட பந்து, குரேஷியாவின் பெரிசிச் கைகளில் பட்டது. அதில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கிரீஸ்மேன் கோல் அடித்தார். முதல் பாதியின் முடிவில் 2-1 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது.

2 வது பாதியில் குரேஷியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், 58வது நிமிடத்தில் பிரான்சின் பால் போக்பா நீண்ட தூரத்தில் இருந்து கோல் அடித்து 3-1 என முன்னிலை கொடுத்தார். விறுவிறுப்பாக சென்ற போட்டியில், மீண்டும் குரேஷியா கோல் அடிக்கும் என எதிர்பாக்கப்பட்டது. ஆனால், இந்தமுறை பிரான்சின் ம்பாப்பே நீண்ட தூரத்தில் இருந்து மின்னல் வேக ஷாட் அடித்து 4-1 என்ன முன்னிலை கொடுத்தார். 

அடுத்த சில நிமிடங்களில், பிரான்ஸ் கோல்கீப்பர் லாரிஸ் பந்தை தவறுதலாக குரேஷியாவின் மாண்ட்சுகிச்சிடம் கொடுக்க, அதை அவர் கோலுக்குள் தள்ளினார். கடைசி நிமிடங்களில் எவ்வளவோ முயற்சி செய்தும், குரேஷியாவால் மீண்டும் கோல் அடிக்க முடியவில்லை. 4-2 என அபார வெற்றி பெற்று உலகக் கோப்பையை 2வது முறை கைப்பற்றியுள்ளது பிரான்ஸ்.

 

Trending News