கடைசி பந்தில் ராஜஸ்தானுக்கு ஷாக்... 1 ரன்னில் சன்ரைசர்ஸ் த்ரில் வெற்றி!

SRH vs RR Match Highlights: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Written by - Sudharsan G | Last Updated : May 3, 2024, 12:12 AM IST
  • புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
  • கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது.
  • ஆனால், கடைசி பந்தில் ரோவ்மேன் பாவெல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
கடைசி பந்தில் ராஜஸ்தானுக்கு ஷாக்... 1 ரன்னில் சன்ரைசர்ஸ் த்ரில் வெற்றி! title=

SRH vs RR Match Highlights: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) தொடரின் 17வது சீசனின் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 50வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. ஹைதராபாத் நகரில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று நடைபெற்று இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இருப்பினும் இந்த முறை சன்ரைசர்ஸ் அணி மெதுவாகவே தொடங்கியது. பவர்பிளே ஓவர்களில் 37 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை ஹைதராபாத் அணி இழந்தது. இருப்பினும், டிராவிஸ் ஹெட் இன்று நிதானமாக விளையாடினார். நிதிஷ் ரெட்டி பவர்பிளேவுக்கு பின் அதிரடி ஆட்டத்தை கைக்கொண்டார். இருவரும் அரைசதம் கடந்த 96 ரன்களுக்கு பார்டனர்ஷிப் அமைத்தனர். 

நிதிஷ் - கிளாசென் அதிரடி 

அந்த வகையில், ஹெட் 44 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த கிளாசென் சிறப்பாக விளையாடி அதே அதிரடியை தொடர்ந்தார். பவர்பிளேவில் ஹைதராபாத் விளையாடியதை பார்த்தால் 170 ரன்களை தாண்டாது என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிளாசென் - நிதிஷ் ரெட்டி ஆகியோர் கடைசி வரை விக்கெட்டை இழக்காமல் சிறப்பாக விளையாடினர். இதனால், ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை அடித்தது. 

மேலும் படிக்க | CSK: ஷாக்கில் சிஎஸ்கே... 5 வீரர்கள் இல்லை - என்ன செய்யப்போகிறார் ருதுராஜ்?

நிதிஷ் ரெட்டி 42 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 76 ரன்களுடனும், கிளாசென் 19 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 42 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 202 ரன்கள் என்ற இலக்குடன் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 

நடராஜன் பர்பிள் கேப் 

புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே பட்லர், சாம்சன் ஆகியோர் டக்அவுட்டானார்கள். இருப்பினும், ஜெய்ஸ்வால் - ரியான் பராக் ஜோடி சிறப்பாக விளையாடியது.  பவர்பிளேவில் மட்டும் 60 ரன்களை இந்த ஜோடி குவித்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் கடந்தனர். 134 ரன்களுக்கு இந்த ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்தது.  ஜெய்ஸ்வாலை 67 ரன்களில் நடராஜனும், ரியான் பராக்கை 77 ரன்களில் பாட் கம்மின்ஸும் ஆட்டமிழக்கச் செய்தனர். 

நடராஜன் வீசிய 18வது ஓவரில் 106 மீட்டருக்கு சிக்ஸர் அடித்த ஹெட்மயர் அடுத்த இரு பந்துகளை டாட் ஆக்கி, மூன்றாவது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். கம்மின்ஸ் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தில் துருவ் ஜூரேல் 1 ரன்னில் வெளியேற ராஜஸ்தான் ஷாக் ஆனது. இருப்பினும், அடுத்த நான்கு பந்துகளில் (1, 0, 0, 0) 1 ரன்னே அடிக்கப்பட்டது. இருப்பினும் கடைசி பந்தில் ரோவ்மேன் பாவெல் சிக்ஸ் அடிக்க கடைசி ஓவருக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. 

கடைசி பந்தில் வெற்றி

புவனேஷ்வர் குமார் பந்துவீச வந்தார். முதல் பந்தில் அஸ்வின் 1 ரன் எடுக்க, 2வது பந்தில் பாவெல் 2 ரன்களை எடுத்தார். மூன்றாவது பந்தில் ஆளே இல்லாத பைன் லெக் திசையில் அடித்து பாவெல் பவுண்டரி அடித்தார். 4, 5வது பந்துகளில் வெற்றிகரமாக தலா 2 ரன்கள் எடுக்கப்பட கடைசி பந்துக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 

ஆனால், அந்த புல் டாஸ் பாலை தவறவிட்ட பாவெல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஹைதராபாத் 1 ரன்னில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி 4வது இடத்திற்கும் முன்னேறியது. 

புவனேஷ்வர் குமார் ஆட்ட நாயகன் விருதை வென்றார். நடராஜன் இந்த போட்டியில் 2 விக்கெட்டுகள் என மொத்தம் இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார். 

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு தெரியுமா? சன்பென்ஸ் வைத்த ரோஹித் சர்மா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

 

Trending News