கொத்து கொத்தாக நீக்கப்படும் பணியாளர்கள்: விழி பிதுங்கி நிற்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்

NRI News: அதிக சம்பளம், வெளிநாட்டு வேலை என பலவித கனவுகளோடு இந்தியாவை விட்டு சென்றவர்கள் இப்போது செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 24, 2022, 03:01 PM IST
  • தங்களுடைய நிரந்தர குடியிருப்பு மற்றும் பணி அனுமதிகளை வாங்கியவர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக பாதிப்பு இல்லை.
  • எச்-விசாக்கள் (H-visas) மற்றும் புலம்பெயர்ந்தோர் அல்லாத வேலை அனுமதி விசாக்களில் (non-immigrant work permit visas) உள்ளவர்கள், நீண்ட காலமாக தங்கள் கிரீன் கார்டுகளுக்காக காத்திருந்தவர்கள் ஆகியோரின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
  • இந்தியாவிற்கு திரும்பி வருவது அவர்கள் முன் உள்ள ஒரு வழியாக இருக்கலாம்.
கொத்து கொத்தாக நீக்கப்படும் பணியாளர்கள்: விழி பிதுங்கி நிற்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் title=

ட்விட்டர், அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் சமீப காலமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. ஒரு காலத்தில் வேலை செய்ய மிகவும் விரும்பப்பட்ட நிறுவனங்கள் இப்போது வேலை பாதுகாப்பின்மையை என்ற மிகப்பெரிய அச்சத்தை ஊழியர்கள் மத்தியில் அதிகமாக்கி வருகின்றன. இந்த பெரிய அளவு பணிநீக்கங்களில் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களில், இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள், குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐக்கள்) அடங்குவர். 

அதிக சம்பளம், வெளிநாட்டு வேலை என பலவித கனவுகளோடு இந்தியாவை விட்டு சென்றவர்கள் இப்போது செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். பலருக்கு வேலை போனதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கான ஸ்பான்சர்களை இழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. வேலை விசாக்களுக்கு ஸ்பான்சர் இல்லாமல் வெளிநாட்டில் தொடர்ந்து அவர்களால் இருக்க முடியாது. தற்போது பணியாளர் நீக்கம் நடைபெறும் நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், பலர் கடந்த பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

தங்களுடைய நிரந்தர குடியிருப்பு மற்றும் பணி அனுமதிகளை வாங்கியவர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக பாதிப்பு இல்லை என்றாலும், எச்-விசாக்கள் (H-visas) மற்றும் புலம்பெயர்ந்தோர் அல்லாத வேலை அனுமதி விசாக்களில் (non-immigrant work permit visas) உள்ளவர்கள், நீண்ட காலமாக தங்கள் கிரீன் கார்டுகளுக்காக காத்திருந்தவர்கள் ஆகியோரின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. 

ஏழு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தங்கள் கிரீன் கார்டுகளுக்காகக் காத்திருக்கும் நிலையில், இது எளிதான செயல்முறையாகத் தெரியவில்லை. இவர்களில் பெரும்பாலானோர், பல தசாப்தங்களுக்கு முன்னர் தங்கள் தொழில் வாழ்க்கையின் துவக்கத்தில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள். அவர்களின் வாழ்க்கையை - வேலை, சமூக மற்றும் வாழ்க்கை முறை என அனைத்தையும் இவர்கள் அங்கு கட்டமைத்துள்ளார்கள். அவர்களது குடும்பங்களும் டிபெண்டண்ட் பர்மிட்டுகளுடன் அங்கு குடியேறினர்.

மேலும் படிக்க | வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் PPF கணக்கு தொடங்க முடியுமா? விதிகள் என்ன? 

இந்தியாவிற்கு திரும்பி வருவது அவர்கள் முன் உள்ள ஒரு வழியாக இருக்கலாம். ஆனால், அப்படி செய்தால், அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டி வரக்கூடும். முதலாவதாக, பல ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து விலகி இருந்தவர்கள், தற்போது இந்திய வாழ்க்கை முறைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். 

அடுத்து, அவர்களுக்கு இந்திய நிறுவனங்கள் வேலை வழங்க தயாராக இருந்தாலும், அமெரிக்காவில் அவர்கள் பெற்ற ஊதியத்துடன் ஒப்பிடுகையில், இந்திய நிறுவனங்களில் கிடைக்கக்கூடும் ஊதியம் மிகக்குறைவாகவே இருக்கும். அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறுபவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஊதியத்தில் ஏற்படும் மாற்றத்தால், அவர்கள் பழகியிருக்கும் ஒட்டுமொத்த உயர் வாழ்க்கைத் தரத்தில் மேலும் சமரசம் செய்ய வேண்டி வரலாம். 

அமெரிக்க தொழில்நுட்பத் துறையில் இந்திய ஊழியர்கள் பணிபுரியும் பொதுவான விசா H1-B ஆகும். மேலும் இந்த விசாவில் இருப்பவர்கள் நூலிழையில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த விசா விதியின் கீழ், பணிநீக்கம் செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் மற்றொரு ஸ்பான்சரை பெறாவிட்டால், ஊழியர்கள் நாடு கடத்தப்படுவார்கள். இந்த இறுக்கமான காலக்கெடுவில் புதிய வேலையைத் தேடுவது மற்றும் தேவையான நடைமுறைகள் மற்றும் ஆவணங்களைச் செயல்படுத்துவது தற்போதைய சூழலில் ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும். 

சிங்கப்பூர், கனடா அல்லது ஐரோப்பிய நாடுகள் போன்ற பிற நாடுகளுக்கு குடிபெயர்வது அவர்கள் முன் இருக்கும் ஒரு விருப்பமாக இருக்கலாம். இந்த நாடுகளில் திறமையான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவை எப்போதும் இருக்கிறது. எனினும், இந்த நாடுகளிலும் தற்போதைய பொருளாதார சூழல் மிகவும் பாதுகாப்பான பணி உறுதியை வழங்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. 

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறிது காலத்திற்கு முன்பு பணியமர்த்துவதை நிறுத்திவிட்டன. மேலும் அவை இப்போது செலவுகளைக் குறைக்க பணிநீக்கங்களை மேற்கொண்டு வருகின்றன. 

சிங்கப்பூரில் உள்ள மெட்டாவின் ஆசிய-பசிபிக் தலைமையகத்தில் 10 சதவீத பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஊடக அறிக்கைகள் ஊகித்தாலும், சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனங்களும் சிறப்பாக செயல்படவில்லை. இந்த நிலையால், பலர் பாதிக்கப்பட்டிருந்தாலும், தொழில்நுட்பத் தொழிலாளர்கள், குறிப்பாக மென்பொருள் பொறியாளர்கள், மோசமான நிலைக்கு ஆளாகியுள்ளனர். 

இந்திய தொழில்நுட்பத் துறை என்ஆர்ஐகளுக்கு கை கொடுத்து தூக்கிவிட தயாராக இருந்தாலும், இந்த மோசமான நிலையிலும்,  என்ஆர்ஐ-கள் இந்திய நிறுவனங்களுக்கு திரும்ப தயாராக இருப்பார்களா என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. 

மேலும் படிக்க | சாகசம் செய்து திருட்டை தவிர்த்த இந்தியரை பாராட்டிய துபாய் போலீஸ் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News