திமுகவுக்கு அடுத்த சிக்கல்! பூதாகரமாகும் யானை தந்தம் கடத்தல் வழக்கு - பின்னணி!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக மிகப்பெரிய பிரச்சனை சந்தித்த நிலையில், தென்காசியில் யானை தந்தம் கடத்தபட்ட வழக்கு அக்கட்சிக்கு மீண்டும் ஒரு சிக்கலை கொண்டு வந்திருக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 18, 2024, 05:02 PM IST
  • தென்காசியில் யானை தந்தம் கடத்தல்
  • திமுக எம்பி கார் ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் கைது
  • மருத்துவமனையில் தென்காசி எம்பி
திமுகவுக்கு அடுத்த சிக்கல்! பூதாகரமாகும் யானை தந்தம் கடத்தல் வழக்கு - பின்னணி! title=

யானை தந்தம் கடத்தல் வழக்கு

யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற வழக்கில் தென்காசி திமுக எம்பி தனுஷ்குமாரின் முன்னாள் ஓட்டுநர் ராஜபாளையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தல் தந்தம் மாட்டிய செய்தி அறிந்ததும் திமுக எம்பி தனுஷ்குமார் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. யானை தந்த கடத்தல் வழக்கில் திமுக எம்பி தனுஷ்குமாரின் ஓட்டுநர் செல்லையாவுடன் கைது செய்யப்பட்ட மற்றொரு நபர் ராஜபாளையம்  ஒன்றிய முன்னாள் திமுக துணை செயலாளரின் மகன் ராம் அழகு என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் அடுத்த புயலை கிளப்ப உள்ளது. அத்துடன் யானை தந்தம் கடத்தல் தொடர்பாக முதல்கட்ட தகவல்களே வெளியாகியிருக்கிறது.

சிக்கிய யானை தந்தம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் பகுதியில் யானைத் தந்தம் விற்பனை செய்வதாக விருதுநகர் புலனாய்வு பிரிவு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் கோபால் தலைமையில் தனிப்படை போலீசார், சேத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை செய்தனர். இந்த நிலையில், சேத்தூர் பகுதியில் சந்தேகப்படும் விதமாக சுற்றித்திரிந்த கணபதி சுந்தர நாச்சியார்புரம் சாவடி தெருவைச் சேர்ந்த திமுக முன்னால் ஒன்றிய துணைச் செயலாளர் அனந்தப்பனின் மகன் ராம் அழகு (40) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர், யானை தந்தங்களை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரிடம் இருந்து சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு யானை தந்தங்களை புலனாய்வு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

வனத்துறை தீவிர விசாரணை

அதன் தொடர்ச்சியாக, புலனாய்வு பிரிவு காவல் துறையினர், சிவகாசி பொறுப்பு வனத்துறை ரேஞ்சர் பூவேந்தனிடம் ராம் அழகையும், பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்களையும் ஒப்படைத்தனர். இதனை அடுத்து வனத்துறை அதிகாரிகள், ராம் அழகரிடம் மேற்கொண்ட விசாரணையில், கணபதி சுந்தரநாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லையா (35) என்பவரும் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், செல்லையா என்பவரையும் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், சில நாட்களுக்கு முன்பு வரை செல்லையா, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமாரிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்தவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சூழலில், வேறு யாருக்காவது யானை தந்தங்கள் விற்பனையில் தொடர்பு உள்ளதா என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | குற்றால அருவி வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!

போதைப்பொருள் வழக்கு

அண்மையில் போதைப் பொருள் வழக்கு திமுகவுக்கு பெரும் தலைவலியாக மாறியது. அக்கட்சியில் இருந்த ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு தேசிய போதைப்பொருள் தடுப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. அவர் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்த நிலையில், உடனடியாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனால் திமுகவில் இருந்து நிரந்தமாக நீக்கப்பட்டார். இருப்பினும் போதைப் பொருள் வழக்கு திமுகவுக்கு அரசியல் களத்தில் மிகப்பெரிய சிக்கலாக மாறியது. இந்திய அளவில் திமுகவுக்கு போதைப் பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக பாஜக உள்ளிட்ட கட்சிகளால் பிரச்சாரம் செய்யப்பட்டது. இப்போது இந்த விவகாரம் சற்று ஓய்ந்திருந்தது. போதைப் பொருள் வழக்கு குறித்து தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.

திமுகவுக்கு அடுத்த சிக்கல் 

இந்த சூழலில் தான் தென்காசியில் யானை தந்தம் கடத்தல் வழக்கில் திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். திமுக எம்பியின் கார் ஓட்டுநருக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், தென்காசி எம்பி தனுஷ்குமாருக்கும் தொடர்பு இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது. இதனால், இந்த விவகாரம் அரசியல் களத்தில் திமுகவுக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கும் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது - முகஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News