டிஜிட்டல் அரெஸ்ட் என்றால் என்ன? தொழில்நுட்பம் மூலம் முடக்கும் புதிய குயுக்தி அலர்ட்!

What Is Digital Arrest: ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற வார்த்தை தற்போது மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் இந்த வார்த்தையின் பொருள் என்ன? தெரிந்துக் கொள்வோம். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 15, 2024, 07:21 AM IST
  • தொழில்நுட்ப முன்னேற்றத்தின் இருண்ட பக்கம்
  • மக்களை ஏமாற்றும் மோசடி பேர்வழிகள்
  • சைபர் கிரைமின் புதிய அவதாரம்
டிஜிட்டல் அரெஸ்ட் என்றால் என்ன? தொழில்நுட்பம் மூலம் முடக்கும் புதிய குயுக்தி அலர்ட்! title=

Cyber Crime: தொழில்நுட்பங்கள் மேம்பட்டுள்ள இந்த நாளில், இன்று உள்ள தொழில்நுட்பம் நாளை மேலும் மேம்பட்டதாக மாறியிருப்பதைப் பார்த்து ஒருபுறம் ஆச்சரியம் என்றால், அதை அடிப்படையாகக் கொண்டு மக்களை பயமுறுத்தி பணம் பறிக்கும் கும்பல்கள் அதிகரித்து வருவது அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. இன்றைய டிஜிட்டல் காலத்தில், கைது செய்வதும் டிஜிட்டல் முறையில் என்று சொன்னால் அதை நம்புபவர்களும் இருக்கிறார்கள். ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற வார்த்தை தற்போது மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் இந்த வார்த்தையின் பொருள் என்ன? தெரிந்துக் கொள்வோம்.

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்றால் என்ன? 

'டிஜிட்டல் அரெஸ்ட்' என்பது மக்களை ஏமாற்றி சைபர் கிரிமினல்கள் பணம் பறிக்க கையாளும் ஒரு புதிய மோசடி யுக்தியாகும். 'டிஜிட்டல் அரெஸ்ட்' போக்கு அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல் துறைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய மோசடியால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. 

காவல்துறை, அமலாக்க இயக்குநரகம், சிபிஐ போன்ற சட்ட அமலாக்க அதிகாரிகள் என்று சொல்லிக் கொள்ளும் மோசடிப் பேர்வழிகள், போன் மூலம் தொடர்பு கொண்டு, சட்டவிரோதமான பொருட்கள், போதைப்பொருட்கள், போலி பாஸ்போர்ட், ஏதேனும் கடத்தல் பொருட்கள் கொண்ட பார்சலை குறிப்பிட்ட நபர் அனுப்பியிருப்பதாகவோ அல்லது அவர்களுக்கு வந்திருப்பதாகவோ சொல்வார்கள்.

அவர்கள் பேசும் தோரணையும் சொல்லும் தகவல்களும் உண்மையானதாகவே தோன்றும் அளவுக்கு சாமர்த்தியமாக பேசுவார்கள். ஒரு கட்டத்தில், வேறு யாரோ தங்கள் முகவரியைத் தவறாக பயன்படுத்துகிறார்களோ என்று நம்பும் அப்பாவி மக்கள், பிரச்சனையில் இருந்து விடுபட்டால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள்.

இது போல, வேறு சில கடுமையான குற்றங்களைச் செய்ததாக நம்ப வைத்தும் சைபர் மோசடி நடைபெறுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவரை ‘டிஜிட்டல் கைது’ செய்துவிட்டதாகவும், சைபர் மோசடி செய்பவர்கள் பயமுறுத்துவார்கள். ஒரு கட்டத்தில், மோசடி செய்பவர்களுக்கு பெரும் தொகையை செலுத்தினால் விட்டுவிடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதாகவும் நம்ப வைத்து ஏமாற்றுகின்றனர். 

மேலும் படிக்க | கொலையாக மாறிய தற்கொலை வழக்கு: தந்தையின் பகீர் வாக்குமூலம்

சைபர் கிரைம் நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவரை யோசிக்கவிடாமல் பயமுறுத்தி, அச்சத்தை உருவாக்கி அதன் மூலம் பணம் கறப்பதாக சொல்கின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே தான் தவறு செய்திருப்பதாகவோ அல்லது தன்னை வேறு யாரோ ஏமாற்றி மாட்டி விட்டதாகவோ நினைத்து பணத்தை கொடுக்க தயாராகிவிடுகின்றனர். 

முதலில் மனதளவில் அவர்களை பலவீனமாக்கி, அவர்களை வேறு யாருடன் பேசவேண்டாம் என்றும், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவோ கட்டாயப்படுத்துகிறார்கள். மேலும், பாதிக்கப்பட்ட அப்பாவி 'டிஜிட்டல் கைது' செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் செலுத்தாவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடியாது என்றும் சொல்லி அச்சுறுத்தி ஏமாற்றுகிறார்கள். 

அதேபோல, குடும்பத்தை சேர்ந்தவர் அல்லது குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் விபத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாகவோ அல்லது அவரை கைது செய்திருப்பதாகவோ தகவல் தெரிவிப்பது போலவும் போனில் சொல்லி, சம்பந்தப்பட்டவர்களை பதற்றப்படுத்தி பணம் பறிக்கும் வேலையும் நடக்கிறது. 

"வழக்கை" சமரசம் செய்ய பணம் கொடுக்குமாறு சொல்லும்போது பாதிக்கப்பட்டவருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க, காவல் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்ற ஸ்டுடியோக்களை அமைத்து அங்கிருந்து வீடியோவில் அழைக்கின்றனர். மோசடிக்காரர்கள் சீருடைகளை அணிந்திருப்பதைப் பார்த்து, அப்பாவிகள் நம்பி பணம் கொடுத்து விடுவதாகவும் கூறப்படுகிறது.  "டிஜிட்டல் கைதுக்கு" உட்படுபவர்கள், பணம் கொடுக்கும் வரை ஸ்கைப் அல்லது பிற வீடியோ கான்பரன்சிங் தளங்களில் தொடர்ந்து இருக்க வேண்டும் என மோசடி செய்பவர்கள் கட்டாயப்படுத்துவார்கள்.

ஏனென்றால், அப்போதுதான் அப்பாவிகளை அழுத்தத்திலேயே வைத்திருக்க முடியும். ஏமாற்றப்படுபவர்களுக்கு யோசிக்க சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால், பணம் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக அவர்களை அழுத்தத்திலேயே வைத்திருப்பார்கள் என்று சைபர் கிரைம் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர். 

உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C), நாட்டில் சைபர் கிரைமை எதிர்த்துப் போராடுவது தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது. இந்த மோசடி தற்போது அதிகரித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.  

MHA எச்சரிக்கை
டிஜிட்டல் கைது வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல்துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) இணையப் பிரிவான ஐ4சி, எச்சரிக்கை விடுத்துள்ளது.  உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C), நாட்டில் சைபர் கிரைமை எதிர்த்துப் போராடுவது தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.

இந்த வழக்குகள் தொடர்பாக 1,000 க்கும் மேற்பட்ட ஸ்கைப் ஐடிகளைத் தடுத்துள்ளது. அத்துடன், மோசடியில் பயன்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான சிம் கார்டுகளைத் தடுக்கும் பணியையும் மேற்கொண்டுள்ளது. 

மேலும் படிக்க | 2 சிறுமிகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது - பதறவைக்கும் சம்பவம்

டிஜிட்டல் கைது மோசடி புகார்கள் தற்போது கணிசமாக அதிகரித்து வருவதை அடுத்து, இந்த விவகாரத்தில்  தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் போர்டல் (NCRP), துரித நடவடிக்கை எடுக்க சைபர் பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி உட்பட மற்ற அமைச்சகங்கள் மற்றும் ஏஜென்சிகளுடன் சைபர் பிரிவு நெருக்கமாக செயல்பட்டு வருவதாக MHA தெரிவித்துள்ளது.

சைபர் குற்றவாளிகள் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி, அவர்களது அன்புக்குரியவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் குரல்களைப் பிரதிபலிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை பயமுறுத்தி, அவர்களிடம் இருந்து பணம் பறிப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

MHA இன் சைபர் பிரிவு இதுபோன்ற வழக்குகளைப் புகாரளிக்கவும், இந்த புதிய சைபர் கிரைம் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறவும் ஒரு ஹெல்ப்லைன் எண்ணை அமைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணை அழைத்து, இதுபோன்ற மோசடிகள் குறித்து உடனடியாக I4C பிரிவுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

DoT அறிவுறுத்தல்
சைபர் மோசடி வழக்குகள் அதிகரித்து வருவதை அடுத்து, தேவையில்லாத தொலைபேசி அழைப்புகளிடம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை (DoT) அறிவுறுத்தியுள்ளது. வெளிநாட்டு மொபைல் எண்களிலிருந்து (+92-xxxxxxxxxx ...) வாட்ஸ்அப் அழைப்புகள் வருவதை சுட்டிக்காட்டும் சைபர் கிரைம் தடுப்புப் பிரிவு, அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்வது மற்றும் மக்களை ஏமாற்றுவதில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க | Cyber Insurance: இணைய மோசடியில் இருந்து உங்கள் பணத்தை பாதுக்காக்கும் ‘சைபர் காப்பீடு’..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News